அஜீத்தை மாற்றிய சூப்பர் ஸ்டாரின் வைர வார்த்தைகள்! Posted by ஷாஜி


“நமக்கு எது விதிக்கப்பட்டிருக்கோ அது தானா கிடைக்கும்” - அஜீத்தை மாற்றிய சூப்பர் ஸ்டாரின் வைர வார்த்தைகள்!

சூப்பர் ஸ்டார் நாற்காலியை அடையாமல் விடமாட்டேன்…” என்று ஒரு காலத்தில் மனம் போனபடியெல்லாம் பேட்டி கொடுத்துகொண்டிருந்த அஜீத் இன்று அடக்கத்தின் சிகரமாய் காணப்படுகிறார். தேவையின்றி பத்திரிக்கைகளில் பேசுவதில்லை. யாருக்கும் சவால் விடுவதில்லை. தான் பாட்டுக்கு தனது கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இந்த மாற்றம் அவருள் எப்படி நிகழ்ந்தது?

இது பற்றி முன்னமே உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும், நண்பர்களின் தளங்களில் படித்திருப்பீர்கள். இருப்பினும் அது ஒரு ஆச்சரியமான விஷயம் என்பதால் ஒரு சிறிய ரீவைண்ட். “சூப்பர் ஸ்டார் கற்கும் பாடம்” பற்றிய பதிவில் நண்பர் ஒருவர் அளித்த கமெண்டை பார்த்த பிறகு எனக்கு இது தோன்றியது. பிற்சேர்க்கையாக தரவேண்டியதை அப்படியே ஒரு தனி பதிவாக தருகிறேன்.


அஜீத்திடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

தொடர் தோல்வியால் துவண்டு போயிருந்த அஜீத்திடம், பில்லா ரீமேக் ஐடியாயாவை சிலர் கூறினார்கள். இதையடுத்து சூப்பர் ஸ்டாரிடம் அனுமதி கேட்டு அவரின் ஆசி பெறுவதற்கு அவரை நேரில் சந்தித்தார் அஜீத்.


சூப்பர் ஸ்டாரும் அஜீத்தை பரிவுடன் உபசரித்து, பில்லா ரீமேக்கிற்கு ஒப்புதலும் ஆசியும் வழங்கினார். அதுமட்டுமல்லாமல், “Living with Himalayan Masters” என்ற புத்தகத்தையும் பரிசளித்தார். (திரையுலகில் சத்யராஜ், விவேக் உள்ளிட்ட பலருக்கு ரஜினி இந்த புத்தகத்தை பரிசளித்திருக்கிறார் தெரியுமா?)

பின்பு அஜீத்திடம், “நமக்குன்னு எது விதிக்கப்பட்டிருக்கோ அது நமக்கு தவறாம கிடைக்கும். அதனால் நாம் எதுக்கும் அலட்டிக்கவோ கவலைப்படவோ கூடாது. நம்ம வேலைய நாம பாட்டுக்கு செஞ்சிகிட்டு போய்கிட்டே இருந்தா போதும். மத்தது தானா நடக்கும்” என்றார்.


மனநிறைவுடன் வீடு திரும்பிய அஜீத், ரஜினி பரிசளித்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார். முதலில் புத்தகத்தை ஆர்வமின்றி படிக்க துவங்கிய அஜீத் பிறகு, பக்கங்களை புரட்ட புரட்ட அசந்தேபோய் விட்டார். அவருக்கு தேவை எதுவோ அது அந்த புத்தகத்தில் கிடைத்தது. புத்தகத்தை முடித்த போது அவர் முழுதும் மாறிவிட்டிருந்தார். “இந்த மாற்றத்திற்கு காரணம் ரஜினி சார் தான்” என்றும் வெளிப்படையாக கூறினார்.

வாழ்க்கையிலும் கேரியரிலும் சூப்பர் ஸ்டார் கூறியதை ஓரளவு பின்பற்ற துவங்கினார். அவர் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் மெல்ல நடக்க ஆரம்பித்தது. பில்லா சூப்பர் ஹிட்டானது. அஜீத் தந்தையானார். (பில்லா ரிலீசின்போது தொலைக்காட்சிகளில் விரிவான பேட்டியளித்தார் அஜீத். அதில் சூப்பர் ஸ்டார் பற்றியும் அதில் நிறைய பேசினார்.)


அஜீத்தின் குழந்தையின் பெயர் அனுஷ்கா. பார்க்க அச்சு அசலாக அஜீத் போலவே இருக்கும் அந்த குட்டி தேவதைக்கு தற்போது ஒரு வயது நிரம்பி இரண்டாம் வயது ஆரம்பித்துவிட்டது.

இப்போது இந்த அஜீத் அதிகம் பேசுவதில்லை. பில்டப்புகளில் ஈடுபடுவதில்லை. இந்த அஜீத்தை அனைவருக்கும் பிடித்திருக்கிறது.

திருவள்ளுவர் கூறுவது போல,

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல் - குறள்

பொருள்: “அறிவிலும் அனுபவத்திலும் தம்மிலும் சிறந்த பெரியோரை போற்றி, மதித்து, தமது நட்பாக்கிகொள்ளுதல் என்பது பெறுவதற்ககரிய பேறுகள் எல்லாவற்றிலும் அரியது”

சூப்பர் ஸ்டாருடன் இவரது அணுகுமுறை விஷயத்தில் இந்த குறள் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி: OnlyRajini.com (சிம்பிள்_சுந்தர்)
 

Copyright 2010 All Rights Reserved Designed by Manibharathi Powered by HostingPalace